Wednesday 1 February 2017

ஆ.மகராஜன்: நின்று போன தூறல்

ஆ.மகராஜன்: நின்று போன தூறல்: நின்று போன தூறல்         ******* வறண்டு வெடித்த வயல்வெளியில் நின்றவனை வானிலிருந்து கடவுளின் விரல்களாய் நீண்டு தீண்டின தூறல்...

நின்று போன தூறல்


நின்று போன தூறல்
        *******



வறண்டு வெடித்த
வயல்வெளியில் நின்றவனை 
வானிலிருந்து கடவுளின் 
விரல்களாய்
நீண்டு தீண்டின தூறல்கள்.

கண்களில் துளிர்த்த 
கண்ணீரோடு கலந்து
உடல் வழி ஊர்ந்து
உப்பு சுவைக் கூட்டி
வழிந்த நீர் 
காய்ந்த வெடிப்புக்
கீறல்களுள் புகுந்து 
காணாமல்  போயிற்று
கணப் பொழுதில்.

மழையாய்ப் பரிணமிக்க 
மறுதலித்து அவன்பால்
கருணையும் கவலையும் 
கொள்ளாத் தூறல் 
நின்று போனதில்,
வானம் பார்த்து நின்றவனின்
விழிவழி  வழிந்த 
கண்ணீர் நில்லாது போயிற்று..!


     -ஆ.மகராஜன், திருச்சி.


      *******

Monday 30 January 2017

கனா கண்ட காலம்

.

கனா கண்ட காலம்
.    ***************

நொருங்கிப்போன பழைய சாணித்தாளில்
மைப்பேனா கொண்டு
எப்பொழுதோ எழுதிய கவிதை ஒன்றைப்
படிப்பது போலிருக்கிறது,
பள்ளி நாட்களை இப்பொழுது
நினைத்துப் பார்க்கும்போது ..

அடிக்கைச் சதையின் மேல்பகுதியை
இழுத்து நசுக்கி
இரண்டு நாளுக்குக் கன்னிப்போய்
வலிக்க்கும்படிக் கிள்ளும்
கணக்கு வாத்தியார் காளிமுத்து,

கடவுளே இவர் சீக்கிரம் செத்துப் போகணும்னு
எங்களின் விபரம் தெரியாப் பருவத்து
வேண்டுதல்களைக் கடந்து,
இன்னமும் இருக்கிறாரோ, இல்லையோ ..

அவர் கரும்பலகையை இரண்டாய்ப்
பிரித்து, மாறி மாறி எழுதும் வேகத்துக்கு
ஈடு கொடுத்து எழுத மறுக்கும் 
பேனாவை உதறி உதறி
டெஸ்க் முழுக்க ஏற்படுத்திய மைக்கறைகள்
இப்பொழுதும் கூட அங்கங்கே
மங்கலாய்ப் படர்ந்திருக்கக் கூடும்..

அப்பொழுதே அடர்ந்து மீசை வளர்ந்த ஜெயராஜ்
தன் இடத்தில் காம்பஸ் முனையால் கீறி வரைந்த

நடுவில் அம்பு பாயும் இதயமும்,
அதன் கீழ் ஐ லவ் யு ----வாசகமும்
அடுத்தடுத்து வந்த மாணவர்களால்
அழிக்கப் பட்டிருக்கலாம்
அல்லது கோடிட்ட இடத்தில்
தங்களின் மனம் கவர்ந்த மாணவிகளின்
பெயர்களை இட்டு நிரப்பியும்
மகிழந்திருக்கலாம்...

வருங்காலத்தில் என்னவாகப் போகிறாய்..?”
என்ற ஹெச் எம் கேள்விக்கு
கவிஞனாகப் போகிறேன்என்று சொல்லி
மற்ற மாணவர்களின்
கேலிச்சிரிப்புக்கு ஆளாகும்,
என் போன்ற யாரோ ஒருவன்
இப்பொழுதும் கூட அந்த வகுப்பில்
இருக்க முடியும் ...

வேகமும் திசையும் கணிக்க முடியாத
வாழ்க்கைச் சூறாவளி
அவனையும் வேட்டையாடி,
மென்மையான கவிதை உணர்வுகளையெல்லாம்
களவாடிச் செல்லாது இருக்க வேண்டும் ...

சுய கழிவிரக்கத்தில் கண்களில் பனித்த
கண்ணீர் துளிகளில்,
நொருங்கிப்போன சாணித்தாள் கவிதையின்
மைப்பேனா எழுத்துக்கள்
மங்கலாகிக் கொண்டே வந்து
மெல்ல மறைந்தும் போயின..!


                        ********

Sunday 29 January 2017

சித்தாந்தக் கண்ணாடிகள்



சித்தாந்தக் கண்ணாடிகள்
========================

இடது வலதாய்ப்
பிரிந்து நிற்கிறோம்.
அனைவரின் கண்களிலும்
அவரவர் கண்ணாடி..

எங்களின் நியாயங்களும்
தர்மங்களும்
உங்களின் கண்ணாடிகளிலும்
உங்களுடையன
எங்கள் கண்ணாடிகளின்
ஊடாகவும்
அநியாயங்களாகவும்
அதர்மங்களாவுமே
காட்சி தருகின்றன.

எப்போதுதான்
இரண்டு தரப்புமே
கண்ணாடிகளைக்
கழற்றி எறிந்துவிட்டு
கண்களால் மதிப்பீடு
செய்யப்போகிறோம்..?

Saturday 28 January 2017

நேசிக்கப்படாத நிஜம்



நேசிக்கப்படாத நிஜம்
       
***************

இருளே இந்த பிரபஞ்சத்தில்
நிஜமும், நிரந்தரமும்..

வெளிச்சம் - ஒளிக்கீற்று
அதன் ஊடாய்ப் பரவவிடும்
தற்காலிக மாயை..

ஆனாலும், வெளிச்சமே
வரமாயிங்கு வரவேற்கப்படுகிறது..!


நிஜமும் நிரந்தரமுமான இருள்,
அச்சமூட்டுவதாலோ என்னவோ
நேசிக்கப்படுவதேயில்லை..
எங்கேயும், எப்போதும், யாராலும்..!

Friday 27 January 2017

நீர்க்குமிழி



நீர்க்குமிழி 

************** 

வளிமண்டலத்தின் ஒரு 
சிறுபகுதியைத் தன்னுள் 
சிறை பிடித்து விட்ட, 

அகம்பாவத் திமிருடன் 
நீர்வெளியின் மேற்பரப்பில் 
ஆணவமாய் அலைந்து 
கொண்டிருக்கிறது.. 

'எப்பொழுது வேண்டுமானாலும் 
உடைந்து போகலாம்' 
என்கிற உண்மை உணராமலே..! 

Wednesday 25 January 2017

மலர்களைப் புரியாத மனிதர்கள்..!




மலர்களைப் புரியாத மனிதர்கள்..!
            ***************

புரிந்து கொள்ளப்போவதில்லை என்று
தெரிந்திருந்தும்,
இந்த மலர்கள் மட்டும் தொடர்ந்து 
மனிதர்களுக்குப்
பாடம் நடத்திக்கொண்டே இருக்கின்றன..!

வாசமும் வாழ்க்கையும்,
சுற்றிலுமுள்ள முட்களுடன்தான் 
என்ற போதும்,
எப்பொழுதும் அழகாய் 
சிரித்துக் கொண்டே இருக்கின்றன 
ரோஜாப் பூக்கள்..!

தனது வேர்கள் புதைந்து நிற்பது,
அழுக்கான சேற்றில்தான் என்ற போதும்,
அருவருப்பை முகத்தில்
பிரதிபலிக்காது 
மலர்ச்சியாய் இதழ்கள் விரித்து
நிற்கின்றன தாமரை மலர்கள்..!

ஆயுள் என்னவோ அற்பம்தான் 
என்றாலும்,
வருத்தம் ஏதும் இல்லாமல்
வாழும் வரை 
சுகந்தமாய் மணம் பரப்புகின்றன
மல்லிகை மலர்கள் ..!

புரிந்து கொள்ளப்போவதில்லை என்று
தெரிந்திருந்தும், 
ஏனோ, இந்த மலர்கள் மட்டும் தொடர்ந்து 
ஏதேதோ உணர்த்திக்கொண்டேதான் இருக்கின்றன
மனிதர்களுக்கு..!


                             ********